மூணு லட்சத்துக்கு 200 டாலர் சம்பளம் உடனடி வேலை!

சமீப காலமாக இடத்துக்கு இடம் முக்குக்கு மூக்கு என்று கப்பல் ஏஜெண்ட்களும்,மோசமான கப்பல் கல்வி பயிற்சி நிறுவனங்களும், அதிலும் ஒரு படி மேலே போய் சில பயிற்சி கல்வி நிறுவனங்கள் முறையற்ற அனுமதியுடன் போலியான அறிவிப்புகள் வாக்குறுதிகள் தந்து எப்படியாவது மாணவர்களை கவர்ந்து உள்ளே இழுத்து விடுகிறார்கள்.
பெற்றோர்கள் ரத்தம் சிந்தி உழைத்து தம் பிள்ளைக்காக பிள்ளையின் வாழ்க்கைக்காக எதிகாலத்திற்காக சேர்த்து வைத்த பணத்தை இது போல இடங்களில் தமது பிள்ளையின் மூலம் முதலீடு செய்வதாக நினைத்து ஏமாற்றம் அடைந்து போகின்றனர்.கட்டிய பணம் கட்டியதுதான் திருப்பி வாங்கவோ,வேறு வழிகளில் மாற்றி விடவோ அடுத்த ஒரு வருடம் வரையோ, அல்லது 4 வருடம் வரையோ நடக்கவே நடக்காது.
இனி வேலையும் தருவோம் என்ற வாக்குறுதிகள் எல்லாம் அட்மிஷனுக்கு முன்னால்வரைதான்.
ஒரு வருடத்துக்கு இத்தனை கேண்டிட் வெளியே வரணும் என்பது அவர்களின் கணக்கு என்றால், அவர்களுக்கு எத்தனை கப்பல்கள் இருக்கும்? அதில் எத்தனை கப்பல்களில் இவர்களுக்கு சுழற்சி முறையில் வேலை தருவார்கள் என்பது இமாலயன் கேள்விதான்.
இளைஞர்கள் எவ்விதம் கவரப்படுகிறார்கள்?
இணையம் மூலம் பெறுவாரியாக கவரப்படுகிறார்கள்.இதில் ஃபேஸ்புக்,கூகுள் என்று வெகு ஈசியாக கவரப்படுகிறார்கள் தேடுகிறார்கள் எப்படி உள்ளே நுழைவது கப்பல் வாழ்க்கைக்குள் என்று.
பல வசதி வாய்ந்த குடும்பங்கள் பிள்ளைக்காக பணத்தை வாரி இறைக்க தயங்குவதில்லை,விளைவு பல மோசடி நிறுவனங்கள் நாங்கள் இவ்வளவு சம்பளம் தருகிறோம் எங்களுக்கு இவ்வளவு நீங்கள் சர்வீஸ் தொகை (!?) தரணும் என்று வெளிப்படையாக அவர்களிடம் மட்டும் கேட்பதுண்டு.
பல அறிவாளிகள் எங்கே இந்த வாய்ப்பு அடுத்தவருக்கு தெரிந்தால் நமக்கு வாய்ப்பு பறிபோய்விடுமோ என்று அஞ்சி ரகசியமாக கேட்கும் தொகையை அள்ளி கொடுப்பதுண்டு,
இனி வேலை கொடுப்பானோ? மாட்டானோ?ஒப்பந்த சம்பளம் தருவானா?என்றெல்லாம் கேள்வியோடே பொட்டி படுக்கைகளை அள்ளி வந்து அவன் அலுவலகத்திலேயே கதியாக கிடப்பதுண்டு.நமக்கு ஒரு அடிமை சிக்கிட்டாண்டா என்பது போல சாயா(டீ) வாங்குவதில் இருந்து அவர்கள் ஆயா போவது வரை இலவசமாக வேலை வாங்குவார்கள்.
சரி ஓட்டு மொத்தமாக நாம் எல்லா பயிற்சி கல்வி நிறுவனத்தையும் குறை கூறி விட முடியாது அவர்கள் சொல்வது போல பதிப்பு முடிந்ததும் கப்பலில் சுழற்சி முறையில் கொஞ்சம் காலதாமதம் ஆனாலும் வேலை தருகிறார்கள் அதே போல ஓட்டு மொத்தமாக எல்லா கப்பல் ஏஜெண்ட்களையும் குற்றம் சுமத்தி விட முடியாது.பலர் வேலையும் எடுத்து கொடுக்கத்தான் செய்கிறார்கள்.
வெளிப்படையாக பேசுவதானால்,மெர்ச்சண்ட்நேவி என்னும் சொல் பெரிய பிரபலத்தை கொண்டது சரியான வேலை என்று பார்த்தால் புதியவர்களுக்கு அந்த யூனிஃபார்ம்,கடல்,வெளிநாடுகள் காண்பது கை நிறைய பணம்,இது மட்டுமே என்று நம்பி உண்மையான கப்பல் வேலை எது என்பதை அறியாமல் புதியவர்கள் போய் விழுவதற்கு காரணமாகிவிடுகிறது.
பல ஏழை பெற்றோர்கள் நில புலன்களை வீடு வாசலை அடமானம் வைத்து வங்கியில் லோன் எடுத்தும் இப்படி செலவிடுவது உயர் சம்பளம் நமது பிள்ளை வாங்கும் என்ற எதிர்கால நம்பிக்கையில்தான்.
வேலை உறுதி தராத கல்வி பயிற்சி நிறுவனங்கள் அடிப்படை கல்வியும்,அடிப்படை பயிற்சியும் மட்டுமே தரும்.அதன் பிறகு வேலைக்காக அலையும் வலி இருக்கிறதே அது ஒரு பெரிய மாயை அதுவும் இதுபோன்ற மோசடி நிறுவனங்களிடம்+ போலி ஏஜெண்ட்களிடம் சிக்கி சின்னாபின்னமாக போவது உச்சகட்ட வலி வேதனைகள்.
கடைசியாக இதை பயமுறுத்தும் வாய்ப்பாக நினைக்காமல் சரியான தேர்வில் சரியான அணுகுமுறையில் அனுபவஸ்தர்களிடமும் ஆலோசனைகள் பெற்று, போலிகளை கண்டு ஏமாறாமல் நல்ல வாய்ப்பை பெற்றிடுங்கள்.

Comments

Popular Posts