கதை நாயகன்

கப்பல் வாழ்க்கையானது உறவுகளின் உணர்ச்சிக்கு அப்பாற்பட்டது.
தேவைக்கு அதிகமாக சொத்து சேர்க்கத்தான் விதை போட்டு, தண்ணீர் ஊற்றி, உரம் சேர்த்து ஊக்கம் கொடுத்து போய் வா மகனே கொண்டு வா அள்ளி பக்கத்து வீட்டுக்காரனை போல என்று நமது கதை நாயகனை தயார் செய்கிறார்கள்.

பக்கத்து வீட்டுக்காரன் பின்னணிக்கு இந்த தண்ணீரும் உரமும் ஊக்கமும் தேவைப்பட்டிருக்காது. காரணம் அவன் தகப்பன் தனது மகன் உழைத்துதான் குடும்பம் முன்னுக்கு வரவேண்டும் என்ற கட்டாயத்தில் மகனை தள்ளவில்லை.அதனால்தான் அவன் வாழ்க்கை செப்பனிட்டு அமைக்கப்பட்டிருக்கிறது.அங்கே அவனுக்கு எந்த அழுத்தமும் தேவைப்படவில்லை.அவன் சொந்த முன்னேற்றம் மட்டுமே அவனுக்கு முக்கியம் என்பதால் பொறுமையாக,அழகாக தனக்கென நல்ல இடம் தேடிக்கொள்கிறான்.
ஆனால் இங்கே நமது கதை நாயகன் போல பல பெற்றோர்களின் வாழ்க்கை அடித்தளமே சரியில்லாமல் போகும்போது பிள்ளைகளை நம்பித்தான் பெற்றோர்களுக்கு வாழ்க்கை விழி பிதுங்குகிறது.தங்களுக்கான வாழ்வியல் சூழ்நிலையை ,தேவைகளை தமது பிள்ளைகளின் மூலமே நிர்ணயித்து கொள்கிறார்கள்.

இன்னும் ஒரு படி மேலே போனால் உனது தங்கச்சியை,அல்லது அக்காக்கள் உட்பட நீதான் அவர்களை கரையேத்தவேண்டும், கட்டிக்கொடுக்கவேண்டும் என்று (எவந்தான் இந்த முறைகளை கண்டுபிடித்தானோ?) சூழுரைப்பார்கள்.
எந்த அடிப்படையில் தேவைக்கு மேல் பிள்ளைகள் பெற உந்துதல் வந்தது? எதிர்கால சிந்தனையும்,திட்டங்களும்,இல்லையென்றால் குடும்ப கட்டுப்பாட்டில் இருந்திருக்கலாமே? 
இனி அக்கா,தங்கை திருமணத்திற்காக சேர்க்கணும்,அவர்களை கட்டிக்கொடுத்தபின்னர் அந்த மீதி கடனுக்கும் சேர்த்து மீண்டும் உழைக்கணும்.     
மகனின் எதிர்காலம் பற்றியெல்லாம் அப்படிப்பட்ட பெற்றோருக்கு சிந்தனையே தேவை இருக்காது. நம் வாழ்க்கையில் நிறைவேறாத ஆசைகளை.கடன் தேவைகளை சீக்கிரமே பெற, நிவர்த்தி அடைய, 
மகனை பலிகடா ஆக்க, கப்பலுக்கு போய் வா மகனே என்று தயார் செய்து அனுப்புகின்றனர்.
அங்கே கப்பலில் எந்த மகனுக்கும் ஏசி அறையில் உட்கார வைத்து ஊதியம் கொடுப்பதில்லை.எப்படி தங்கள் தேவைகளை பூர்த்தி செய்ய பிள்ளைகளை பெற்றோர் பகடை காயாக ஆக்குகிறார்களோ ?அதே போல்தான் அதைவிட ஒரு படி அதிகமாகத்தான் கப்பல் நிர்வாகமும்,அதிகாரிகளும் தேவைக்கு அதிகமாகவே பிழிந்தெடுத்து வேலை வாங்கி கொள்வார்கள்.
ஒருவேளை கடன் தொல்லை அதிகமாக இருப்பின்,கடன் கொடுத்தவர் மனது என்பது சகிப்பு தன்மையற்றதாகி போய்விடுகிறது.அந்த பெற்றோர் மீதே அவர்களுக்கு நம்பிக்கையின்மை எழுந்துவிடுகிறது.இந்த பையனும் எங்கே நமது கடனை தருவானோ மாட்டானோ என்று குழப்பத்திலேயே அதிகபட்சமாக நம்து கதை நாயகனை குடைச்சல் கொடுப்பதுண்டு.

இங்கே இதில் யார் சுயநலவாதி? யாருக்காக நாம் உண்மையிலேயே உழைக்கிறோம்? எதற்காக இந்த கப்பல் வாழ்க்கையை தேர்ந்தெடுத்தோம்? என்று பல நாட்கள்,பல மணி நேரங்கள் தனிமையின் கோரமான தருணங்களில் சிந்தனையிலேயே காலம் கடந்துபோகும்
ஒரு கட்டத்தில் தியாக மனப்பானமை மேலோங்கி என் குடும்பத்துக்காகத்தானே உழைக்கிறேன்,என் குடும்ப கடனுக்காத்தானே உழைக்கிறேன் பரவாயில்லை என்னால் மட்டும்தான்(!) முடியும் என்று புலனடக்கம் செய்து கொள்கிறான் நமது கதை நாயகன்.

இந்த தியாக மனப்பான்மை உள்ள கதை நாயகன் மட்டுமே பின் வரும்,முன் வரும் பிர்ச்னைகளை,கடன்களைபற்றியெல்லாம் சிந்தனை கொள்பவனாக இருக்கிறான்.மற்ற உடன்பிறப்புக்கள் சுயநலவாதிகளே.
என்னாலா கடன் வந்தது?நான் ஏன் தங்கைக்கு திருமணம் செய்யணும்?இது போன்ற இவர்கள் திருமணம் செய்தவுடனே பெற்றோர்களுக்கு கல்தா கொடுத்துவிட்டு எங்கோ தனது மனைவியை கூட்டிக்கொண்டு சந்தோஷமாக வாழ போகும் சுயநலவாதிகள் இவர்கள் செய்யும் செயல்கள் வாழ்விற்கு ஏற்புடையதுதானா?
இப்படி இந்த ஒரு விஷயம்தான் கதை நாயகன் மனதிலும் ஆழமாக வேரூன்றி போய்விடுகிறது.சீக்கிரமே திருமணம் செய்யணும்,தேவைக்கு அதிகமாக மகன்கள் பெற்றெடுக்கவேண்டும்.ஒரு கட்டத்தில் பிள்ளைகளை இதுபோல கப்பலுக்கு தயார் செய்து அனுப்பிவிட வேண்டும். ஒரு 50 வயதிலேயே வீட்டில் ஓய்வில் இருந்துவிடவேண்டும் என்று இன்னோர் கதை நாயகர்களை உருவாக்குகிறார்கள். 
எப்படியான தொடர் சங்கிலி உறவு முறைக்குள் நாம் அடங்கி போய் விடுகிறோம்?
இங்கே வாழ்க்கை ஒரு வட்டம் என்பதை நாம் உணர்கிறோமா? 
இதிலிருந்து வெளியேற்றம் சாத்தியமாகிறதா?                       புரிந்து கொள்ளும் பக்குவம் கொண்ட நாம் மீண்டும் மீண்டும் இந்த வட்ட வாழ்க்கைக்குள்ளேயேதான் சுழன்று கொண்டு இருக்கிறோம் என்பதை நினைத்தால்...........
இன்னும் இன்னும் இன்னும் வாழ்க்கை சூன்யம் போலத்தான் காட்சியளிக்கிறது. 


Comments

Popular Posts